ஜிம்மில்வருமே கும் வருமானம்! - தொழில்

ஜிம்மில்வருமே கும் வருமானம்! - தொழில்

தே க ஆரோக்கியத்தை விளையாட்டா எடுத்துப்பாங்களா, யாராவது..? அதனால், இந்த நேரத்தில் உடற்பயிற்சி நிலையம் தொடங்குவது நல்ல லாபம் தரக்கூடிய தொழில்!
ஒரு பெரிய அறை... கொஞ்சம் கருவிகள் இருந்தால் போதும் எளிதாக உடற்பயிறசி நிலையம் தொடங்கிவிடலாம்.
ஊரின் தன்மையைப் பொறுத்து எந்த விதமான முறையில் அமைக்கலாம் என்பதைத் தீர்மானித்துக்கொள்ளவேண்டும். சிறிய கிராமம் எனும்போது பளு தூக்கும் பயிற்சிகளை அளிக்கும் சாதாரண கருவிகளோடு, ஸ்கிப்பிங் கயிறு, தம்புள்ஸ் போன்ற எளிமையான உபகரணங்கள் இருந்தால் போதும். இதற்கு அதிகபட்ச முதலீடு 30 ஆயிரம் ரூபாய் போதும். சிறிய ஊர்களில் மாதம் ஐம்பது ரூபாய்க்குள் கட்டணம் வைத்தால் தான் பலரும் விரும்பித் தேடி வருவார்கள். ஆரம்பத்திலேயே பெரிய அளவில் முதலீடு செய்துவிட்டு, ஆட்கள் வரவில்லை என்றால் நஷ்டப்பட வேண்டியிருக்கும்.
கொஞ்சம் பெரிய நகரங்கள் என்றால் மாதம் 250 ரூபாய்வரை கட்டணம் வசூலிக்க முடியும். ஆனால், அதற்கு ஏற்ப சுமார் இரண்டு லட்ச ரூபாய்வரை முதலீடு செய்யவேண்டும். அதற்கு உடற்பயிற்சிக் கூடத்தைக் கலர்ஃபுல்லாக அமைக்க வேண்டும். நடைப் பயிற்சி, தொடைப் பயிற்சி என்று ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் தனித்தனியான பயிற்சிக் கருவிகள் செட்டப்போடு ஜிம்மை அமைக்கலாம். எதுவாக இருந்தாலும் குறைந்தபட்சம் 100 உறுப்பினர்கள் இருக்கும்வகையில் ஆட்களைப் பிடிக்கவேண்டும்.
இந்தத் தொழிலைப் பொறுத்த அளவில் இடத்தைத் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். பாலைவனத்தில் கடைபோட்டுவிட்டு வியாபாரமே ஆகவில்லை என்று கவலைப்படுவதைப் போல, பொருந்தாத இடத்தில் பயிற்சிக்கூடத்தை அமைத்துவிட்டு பிறகு அவதிப்படக் கூடாது. இளைஞர்கள் அதிக அளவில் நடமாடும் கல்லூரிகள் இருக்கும் இடத்தில் அமைப்பது நல்லது. அதேபோல, குடியிருப்புப் பகுதிகளிலும் அமைக்கலாம். எதுவாக இருந்தாலும் நல்ல காற்றோட்டம் உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சிக் கூடத்துக்கு அடிப்படை யான தேவை, நல்ல பயிற்சியாளர்கள். அவர்களின் ஈடுபாட்டை வைத்துதான் அந்த உடற்பயிற்சிக் கூடத்துக்கே மரியாதை. அதனால், தெளிவான, திறமையான ஆட்களைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும்.
பளுதூக்குதல், ஆணழகன் போட்டி போன்றவற்றுக்குச் செல்பவர்களை பகல் நேரங்களில் பயிற்சி கொடுக்க வைக்கலாம். சம்பளத்துக்குத்தான் வைக்கவேண்டும் எனபதில்லை. இலவசமாக இவர்கள் பயிற்சி செய்துகொள்ள அனுமதித்து, பகுதி நேரமாக உடற்பயிற்சி கற்றுக் கொடுப்பவர்களாகவும் பணியாற்ற வைக்க முடியும்.
உடற்பயிற்சிக்கான நேரங்களை டைம் டேபிள் போட்டு பிரித்துக் கொள்ளவேண்டும். அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் போன்றோருக்கு காலை 4.30 முதல் 9.30 மணிவரை மணிக்கு ஒரு செட் என்ற கணக்கில் அனுமதிக்கலாம். ஒரு செட்டுக்கு சராசரியாக 20 பேர்வரை பயிற்சி கொடுக்கலாம். அதேபோல மாலை 5.30 முதல் 9.30 வரை 4 செட்களுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும். மதிய வேளையில் பெண்களுக்கு நேரம் ஒதுக்கலாம். இதற்காக, ஒரு பெண் பயிற்சியாளரை பணியமர்த்தலாம்.
பயிற்சி மூலமாகக் கிடைக்கும் பணம் தவிர வருபவர்களுக்குப் பயன்தரும் வகையில் சத்து மாவுகள், சிறிய உடற்பயிற்சி கருவிகள் போன்றவற்றை விற்பனை செய்து மாதம் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இதனைக்கொண்டே பெண் பயிற்சியாளருக்கு சம்பளம் கொடுத்து விடமுடியும்.
ஒருவருக்கு சராசரியாக கட்டணம், 100 ரூபாய் என வைத்துக் கொண்டாலும் மாதம் 25,000 ரூபாய் வரைகூட வருமானம் பார்க்கலாம். இடத்துக்கான வாடகை (இடத்தைப் பொறுத்து மாறுபடும்) பயிற்சியாளர் சம்பளம் மற்ற செலவுகள் எல்லாம் போக, சராசரியாக 10,000 ரூபாய்க்கும் குறையாமல் லாபம் பெறலாம்.
ஒரு பகுதியில் நல்லவிதமாக சேவை செய்து பேர் வாங்கி விட்டால் போதும், மற்ற இடங்களிலும் கிளைகளைத் தொடங்கி லாபத்தை பல மடங்காக்கிக் கொள்ளலாம். 

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்