சின்னம் பெரிது பகுதி-7 : ஒரே காலணி பிராண்டிலிருந்து பிறந்த உலகின் மிக பிரபலமான 2 காலணி பிராண்டுகள் – Adidas Vs. Puma உருவான கதை

சின்னம் பெரிது பகுதி-7 : ஒரே காலணி பிராண்டிலிருந்து பிறந்த உலகின் மிக பிரபலமான 2 காலணி பிராண்டுகள் – Adidas Vs. Puma உருவான கதை


adidas vs puma

ஜெர்மனியின் பவேரியா மாநிலம். ஹெர்சோஜெனௌரச் (Herzogenaurach) எனும் சிறுநகரின் நதிக்கரையில் ஹெர்பர்ட் என்பவர் ஆடியின் கல்லறையின் முன்பும், ஜோஷென் என்பவர் ரூடியின் கல்லறை முன்பும் நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். வாலி – சுக்ரீவன் போலிருந்த ஆடி (Adi) மற்றும் ரூடி (Rudi) சகோதரர்களுக்கிடையான மனஸ்தாபமாக ஆரம்பித்த விரிசல் காலணி (shoe) சந்தையை இரண்டு காலணிகளாகப் பிரித்திருந்தது.
 Herbert Heiner, CEO of Adidas & Jochen Zeitz, CEO of the Puma
ஹெர்சோ நகரில் அதுவரை எவர் இருவரும் கைகுலுக்குவதற்கு முன் முகத்தைப் பார்ப்பதைவிட அவர் காலில் என்ன அணிந்திருக்கிறார், அடிடாஸா (adidas)பூமாவா (Puma)? என்பதைத்தான் முதலில் பார்ப்பார்கள். அடிடாஸுக்கு விசுவாசமான கறிக்கடை, பழக்கடை, ரொட்டிக்கடை, பார் எதிலும் பூமா விசுவாசிகள் அன்னந்தண்ணி புழங்கமாட்டார்கள்.
ஹெர்பர்ட் ஹெய்னர், adidas நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி. ஜோஷென் செய்ட்ஸ், Puma நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி. மூன்று தலைமுறையைக் கடந்து மூடுபனியாய் படர்ந்திருந்த பகையை உடைக்கும் வகையில் இரண்டு நிறுவனங்களுக்கிடையே தோழமையான கால்பந்தாட்டம் தொடங்கவிருந்தது. இருவரும் கை குலுக்கினர், சிரிப்பை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர். அங்கு குழுமியிருந்த எல்லோருடைய மனத்திரையிலும் கடந்தகாலம் ஒரு கணம் நிழலாடியது.
வெயிலோடு விளையாடி, பனியோடு உறவாடி பள்ளியிலிருந்து வீடுதிரும்பிய ரூடி (ருடால்ஃப் டாஸ்லர்) காலணிப் பட்டறையில் மூத்த மகனாக லட்சனமாய் அப்பாவிற்கு ஒத்தாசையாக இருப்பான். அப்பா கிரிஸ்டோப் டாஸ்லர் (Christoph Dassler) காலணித் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். அம்மா பௌலின் அடுப்பங்கறையிலேயே இஸ்திரிக்கடை நடத்தி வந்தாள்.

adidas vs puma
கட்டாய ராணுவ சேவையை முடித்துவிட்டு உயிரோடு வீடு திரும்பிய இளைஞர்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு மாற முயன்றுகொண்டிருந்தனர். அதில் அண்ணன் ரூடி ஒரு தோல் பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருந்தான்.
தம்பி ஆடி (அடால்ஃப் டாஸ்லர்) அம்மாவின் அடுக்களையிலேயே ஒரு தட்டியைப்போட்டு சொந்தமாகப் பிரத்யேகமாக விளையாட்டுகளுக்கான காலணிகளை உருவாக்க ஆரம்பித்திருந்தான். வியாபாரம் சூடுபிடிக்கவும் ஏற்கனவே முன்னனுபவம் உள்ள அண்ணன், தம்பியோடு இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தான். தம்பியும் பச்சைக்கொடிகாட்ட 1924 ல் டாஸ்லர் சகோதரர்கள் காலணி நிறுவனம் (Dassler Brothers Shoe Company) என்ற ஒன்றைத் துவங்கினர்.
அண்ணன் வியாபாரத்தில் கெட்டி என்றால், தம்பி புதுப்புது காலணிகளை வடிவமைப்பதில் கில்லாடி. இருவரின் பலமும் சரியான கூட்டணியாக அமைந்தது. மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத காலம் என்பதால் அவர்கள் பட்டறையை இயக்க மிதிவண்டியையே பயன்படுத்த வேண்டியிருந்த்து. சக்கரம் சுழன்றது. நிறுவனம் மளமளவென்று வளர்ந்தது.
adi dassler dassler shoe
1928 நெதர்லாந்தில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டிருந்த 46 நாடுகளில் ஜெர்மனியிலிருந்து அதிகபட்சமாக சுமார் 300 பேர் கலந்துகொண்டனர். ஒலிம்பிக்கின் பிறப்பிடமான க்ரேக்கத்திலிருந்து வெறும் 20 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்தும் அதே என்னிக்கையிலே வீரர்கள் கலந்துகொண்டனர் என்ற போதிலும் ப்ரிட்டிஷ் காலனி நாடாகவே பங்கேற்றது. அதனால் பதக்கம் வெல்லவில்லை என்பதில் பாதகம் இல்லை. அந்த வருட ஒலிம்பிப் போட்டிக்களில் அமெரிக்காவையடுத்து (56) அதிகப்படியான பதக்கங்கள் (31) வென்று ஜெர்மனி 2வது இடத்திலிருந்தது.
ஆடி- ரூடி சகோதரர்கள் அந்த ஒலிம்பிக்கில் 90% ஜெர்மனிய வீரர்கள் டாஸ்லர் காலணிகளை (Dassler Shoes) அணிந்து பதக்கம் வென்றதைக்கண்டு பூரிப்படைந்தனர்.
ஆடி தயாரித்திருந்த புதியவகை ஸ்பைக் காலனிகள் ஓட்டப்பந்தய வீரர்களை வெகுவாகக் கவர்ந்தது. நீளம் தாண்டுதல், கால்பந்து போன்ற வெவ்வேறு போட்டிக்கு வெவ்வேறு விதமான காலணிகளை ஆடி வடிவமைத்தான். அதை ரூடி கூவிக் கூவி விற்றான். காலணியின் உலகமே அன்றளவில் சிறியது. அதிலும் விளையாட்டுக்காண காலணிகள் என்பது ஒரு குட்டி சந்தை. உலகலாவிய விளையாட்டு வீரர்களிடையே ஜெர்மனியின் டாஸ்லர் காலணிகள் பிரபலமடைய ஆரம்பித்தன.
1932 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒலிம்பிக்கில் 36 நாடுகளே பங்கேற்றபோதிலும் ஜெர்மனி பதக்கப்பட்டியளில் அதள பாதாளத்திற்குச் சென்றது.
ஹிட்லர் கர்ஜித்தார். 1936 ஒலிம்பிக்கிற்கான அச்சாரத்தை பலமாகப் போட்டார். பார்சிலோனாவா (Barcelona)? பெர்லினா (Berlin)? எங்கு ஒலிம்பிக்கை நடத்துவது என்ற கடும் போட்டியில், ஹிட்லரால் ஜெர்மனியின் மீதான முதல் உலகப்போர் சுவடுகளையும் தாண்டி நூலிழையில் ஸ்பெயின் நாட்டை முந்திக்கொண்டது ஜெர்மனி. இப்படியொரு ஒரே இரவில் இராவணனிலிருந்து இராமனாகும் ஒரு சந்தர்ப்பத்தை நழுவவிடுவாரா நாஜித் தலைவர்.
வரலாறு காணாத ஏற்பாடுகள் தொடங்கின. 100,000 இருக்கைகள் கொண்ட விளையாட்டு அரங்கம். உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பெர்லின் ஒலிம்பிக் நேரலை, 41 நாடுகளில் ரேடியோ வர்ணனை. இது போதாதென்று மேற்கத்திய பண்பாட்டின் தொட்டில், ரோமுக்கு நிகரான வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட ஒலிம்பிக்கின் பிறப்பிடமான க்ரேக்கத்திலிருந்து (ஏதன்ஸ்) அணையா சுடர் ஒன்றை தொடர் ஓட்டமாக உலகின் பல்வேறு முன்னணி வீரர்கள் ஜெர்மனியில் விளக்கேற்றும் உட்சவம் கோலாகளமாக நடைபெற்றது.
இந்த ஒட்டுமொத்த வெளிச்சத்தையும் டாஸ்லர் சகோதரர்கள் தன் நாஜி விசுவாசத்தால் தன் பக்கம் திருப்பிக்கொண்டனர். உலகிலேயே முதல் முறையாக விளையாட்டு வீரர்களுக்கு காலணி, உடை சகிதம் எல்லாவற்றையும் ஸ்பான்ஸராகக் கொடுத்து ஆதரிக்கும் வழக்கத்தை டாஸ்லர் சகோதரர்கள்- குறிப்பாக ஆடி தொடங்கி வைத்தார்.
 adidas vs puma
அடிப்படையில் தானும் ஓட்டப்பந்தய வீரர் என்பதால் உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்களெல்லாம் ஒரே இடத்தில் திரண்டிருக்கும் இது போன்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களின் பின்னூட்டங்களைவைத்து சிறந்த விளையாட்டுக் காலணிகளை வடிவமைக்கலாம் என்பது ஆடியின் எண்ணம். ஆனால் ரூடியின் வியாபார மூளை வேறு விதமாகக் கணக்குப் போட்டது. ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்ள வேண்டும், உலகத்தரத்தில் நம் தயாரிப்பு இருக்கும்பட்சத்தில் தேவையானவர்கள் தேடி வருவர். ஒட்டுமொத்த நாஜிப் படைக்கான காலணி காண்டிராக்ட் மட்டும் கிடைத்துவிட்டால் போதும். வாழ்கையை அனுபவிக்கலாம். இருந்தாலும் அவர் தம்பியைத் தடுக்கவில்லை.
1936 பெர்லின் ஒலிம்பிக் ஹிட்லர் திட்டமிட்டதுபோலவே ஆதிக்கத்தை நிலைநாட்டும் வண்ணம் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி அதிகபட்சமாக 89 பதக்கங்கள் வென்றது (33 தங்கம், 26 வெள்ளி, 30 வெண்கலம்). இது போதாதென்று ஹிட்லர் மாடத்து வெள்ளைப் புறாவொன்று உலக ஒற்றுமைக்காக தாமாகவே முன்வந்து சமாதானம் மற்றும் சகிப்புத்தன்மையின் புகலிடமாம் ஜெர்மனி வானில் சிறகடித்து உயரப்பறந்தது. அது வேறு யாரும் இல்லை. நம் ஆடி தான். அமெரிக்க- ஆஃப்ரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸை ஸ்பான்சர் செய்து 4 தங்கம் வெல்ல உதவி புண்ணியம் தேடிக் கொண்டது டாஸ்லர் காலன நிறுவனம். ஹிட்லர் பின் நாட்களில் டாஸ்லர் நிறுவன வளர்ச்சிக்கு கைகொடுக்கவில்லையென்றபோதும் ஓவன்ஸின் புகழ் கால் கொடுத்தது.
 puma vs adidas
ஆடியும், ரூடியும் சேர்ந்தா மாஸ்டா என்று பாட்டுபாடவேண்டிய கட்டத்தில் அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் முட்டிக் கொண்டது. இரண்டாம் உலகப்போரை அட்சதை தூவி ஹிட்லர் ஆரம்பித்துவைக்க போருக்குப் போவாதா, வியாபாரத்தை கவனிப்பதா என்பதில் ஆரம்பித்த மனஸ்தாபம் அந்தரங்கம் வரை சென்றது. சகோதரர்களுக்கிடையே சொந்த மற்றும் வியாபார மனஸ்தாபம் மேலோங்கியது. அந்த உலகப்போர் சமயத்தில் அமெரிக்க படையினரால் அண்ணன் ரூடி கைது செய்யப்பட்டார்.
சிறைவாசம் முடிந்து வெளியே வந்த ரூடி மனதில் தூங்கிக்கிடந்த சிறுத்தை சீறிப்பாய்ந்தது. தம்பி Adi Dassler என்ற தன் பெயரை சுருக்கி Adidas என்ற புதிய பிராண்ட் காலணி தயாரிப்பதை கவனித்தார். Adidas என்ற பெயர் – All Day I Dream About Sports என்பதன் சுருக்கம் என்றும் சிலர் கறுத்து சொல்லி கொளுத்திப்போட்டனர். அதனால் முதலில் RUDA என்று தன் பெயரின் சுருக்கமாகவே ஒரு காலணி தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு PUMA என்ற நிறுவனத்தை ஹெர்சோஜெனௌரச் நதிக்கரையின் மறுபுறம் ஆரம்பித்தார்.
adidas logo revolution puma logo
இரண்டு நிறுவனங்களும் தனக்கான தனித்தன்மையோடு விளங்கின. அது ஆடி- ரூடி அடிப்படை குணாதிசயங்களில் உள்ள முரண்களைப் பரைசாற்றும் விதமாக இருந்தது.
Adidas ன் வியாபார உக்திகள் எல்லாம் தடாலடி, ஊருக்கு உறக்கச் சொல்வது என்றால், Puma வின் வியாபர உக்தி எதிர் துருவம். செவிவழிச்செய்தி மூலமாகவே முன்னுக்கு வருவது. இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் சில ஆய்வாளர்கள் குறிப்பிடும் நுட்பமான வித்யாசம் என்னவென்றால் அடிடாஸ் ஜெர்மனிக்கே உரித்தான ஆதிக்கத்தின் அடையாளமாகவும், பூமா ஒடுக்கப்பட்டவரின் குறியீடாகவும் மாறிப்போனது.
என்னதான் வியாபார விகித்தைப் பார்த்தால் அடிடாஸ், பூமாவைவிட 3 மடங்கு பெரியது என்றாலும் கால்பந்து மேதை பீலே முதல் இன்றைய ஓட்டபந்திய தங்கமகன் உசைன்போல்ட் வரை ஜெயிக்கிற குதிரையை இனங்கானும் சத்தமில்லா புரட்சியை Puma செய்து வறுகிறது.
nike shoe
இந்த 60 ஆண்டு பகையை கேக் வெட்டி, பலூன் உடைத்து ஊதி அனைக்கும் நோக்கத்துடந்தான் அந்த வரலாற்று சிறப்புமிக்க கால்பந்தாட்டம் நடைபெற்றது. அப்படி பகைமை பாராட்டாமல் சேராவிட்டால் மூன்றாவதாக ஒருவன் போட்டிக்கு வந்துவிடுவான் என்ற எச்சரிக்கையுணர்வு.
இப்படிப்பட்ட சகோதரர்களின் வம்சாவழியினர் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் புதிதாக ஒருவர் காலூன்ற முடியுமா? செய்து காட்டினார் ஃபில் நைட். Nike காலணி நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்.
Nike எப்படி Adidas, Puma வை மிஞ்சும் நிறுவனமாக வளர்ந்தது. இந்திய ஒலிம்பிக் கனவுகளுக்கு இதைப் போன்ற ஒரு தொழில்புரட்சி நடப்பது ஏன் முக்கியம்?. அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.


Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்